search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலோர காவல்படை"

    விசைப்படகில் கோளாறு ஏற்பட்டதால் நடுக்கடலில் தத்தளித்த 13 தமிழக மீனவர்களை கடலோர காவல் படை இன்று கரைசேர்த்தது. #TamilNaduBoatRescue #IndianCoastGaurd #GajaCyclone
    கன்னியாகுமரி:

    வங்கக் கடலில் உருவாகி உள்ள கஜா புயல் நாளை மறுநாள் கடலூருக்கும்-பாம்பனுக்கும் இடையே கரை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்பும்படி அறிவிக்கப்பட்டது. அதன்படி மீனவர்கள் கரை திரும்பினர்.

    இதற்கிடையே கன்னியாகுமரி மீனவர்கள் உள்ளிட்ட 13 மீனவர்கள் சென்ற விசைப்படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் நடுக்கடலில் அனைவரும் தத்தளித்தனர்.

    மீனவர்கள் கரை திரும்பாதது பற்றி தகவல் அறிந்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களைத் தேடினர்.



    இந்நிலையில் நடுக்கடலில் தத்தளித்த தமிழக விசைப்படகை இந்திய கடல் பகுதியில் இருந்து 220 நாட்டிகல் மைல் தொலைவில் கடலோர காவல் படை இன்று கண்டுபிடித்தது. பின்னர் கடலோர காவல் படை கப்பல் உதவியுடன், அந்த விசைப்படகு லட்சத்தீவில் கரைசேர்க்கப்பட்டது. மீனவர்களும் பத்திரமாக கரை திரும்பினர். #TamilNaduBoatRescue #IndianCoastGaurd #GajaCyclone
    இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் தனியாருக்கு சொந்தமான கீற்று கொட்டகையில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடலோர காவல்படை துணை சூப்பிரண்டு கலிதீர்த்தான், இன்ஸ்பெக்டர் மும்தாஜ்பேகம் மற்றும் போலீசார் அங்கு சென்று அந்த கீற்று கொட்டகையை சோதனையிட்டனர். அப்போது அங்கு 15 மூட்டைகளில் 960 கிலோ உரம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர், இந்த உர மூட்டைகள் எதற்காக அங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவைகள், தேயிலை தோட்டத்துக்கு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி உரம் என்பதும், கோடியக்காட்டில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கீற்று கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    இதேபோல் கடந்த மே மாதம் வேதாரண்யம் அருகே சிறுதலைகாடு கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    இந்திய கடலோர காவல் படையின் நவீன ரோந்து கப்பல் ‘வீரா’ சென்னை அருகே நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
    சென்னை:

    இந்திய கடலோர காவல் படைக்கு தேவையான ரோந்து கப்பல்களை தயாரித்து வழங்கும் பணியில் சென்னை அருகே காட்டுப்பள்ளியில் உள்ள எல்.அண்ட்.டி. கப்பல் கட்டும் தளம் ஈடுபட்டு வருகிறது. அங்கு புதிதாக தயாரிக்கப்பட்ட 3-வது நவீன ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடந்தது.

    இந்த கப்பலை இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய கூடுதல் இயக்குனர் ஜெனரல் கே.ஆர்.நாட்டியால், அவரது மனைவி சுனிதா நாட்டியால் இருவரும் நாட்டுக்கு அர்ப்பணித்தனர். அந்த கப்பலுக்கு ‘வீரா’ என்றும் பெயர் சூட்டினர்.

    பின்னர் கூடுதல் இயக்குனர் ஜெனரல் நாட்டியால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்தின்கீழ், இந்திய கடலோர காவல் படைக்கு தேவை யான 7 ரோந்து கப்பல்கள் தயாரிக்கும் பணி காட்டுப்பள்ளியில் உள்ள எல்.அண்ட்.டி. நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதுவரை 3 ரோந்து கப்பல்கள் தயாரித்து அளித்துள்ளனர். தற்போது 3-வது கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

    முதல் ரோந்து கப்பலான விக்ரம் சென்னையில் நடந்த ராணுவ கண்காட்சி தொடக்க விழாவின்போது கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கப்பலை உருவாக்க 2½ ஆண்டுகள் அவகாசம் எடுத்துக்கொண்டனர். 2-வது கப்பல் அதைவிட குறைந்த காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது ‘வீரா’ ரோந்து கப்பல் 21 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

    சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பணிகளில் இந்த கப்பல் ஈடுபடுத்தப்படும். நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பல் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 5 ஆயிரம் கடல் மைல் தூரம் வரை பயணம் செய்யமுடியும்.

    எத்தகைய சூழ்நிலையிலும் இந்த கப்பலை இயக்க முடியும். இதில் 14 அதிகாரிகளுடன் மொத்தம் 102 வீரர்கள் பயணம் செய்யும் வசதி உள்ளது. இதன் ஆயுள் காலம் 25 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு மண்டல ஐ.ஜி. பரமேஷ்வரன், எல்.அண்ட்.டி. நிறுவன நிர்வாக இயக்குனர் கண்ணன், நிர்வாக தலைவர் அரவிந்தன் உள்பட கடலோர காவல் படை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். 
    தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு மேலும் 2 ரோந்து கப்பல்கள் வர இருப்பதாக, இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய கமாண்டர் ராஜன் பர்கோத்ரா தெரிவித்தார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே இந்திய கடலோர காவல்படைக்கு ரூ.10 கோடியே 56 லட்சம் செலவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நிர்வாக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய கமாண்டர் ராஜன் பர்கோத்ரா கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பிரசாந்த், வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ரிங்கேஷ்ராய், துணைத்தலைவர் வையாபுரி, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், சுங்கத்துறை கூடுதல் ஆணையாளர் சிவக்குமார், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுனாசிங், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், விஜயநாராயணம் இந்திய கடற்படை ஐ.என்.எஸ்.கட்டபொம்மன் நிலைய கமாண்டர் விஷால்குப்தா, இணையம் துறைமுக திட்ட சிறப்பு அதிகாரி விஷ்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் கிழக்கு பிராந்திய கமாண்டர் ராஜன் பர்கோத்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் இந்திய கடலோர காவல்படை நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் வீரர்கள் மற்றும் இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் கப்பல்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற் காக அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்து உள்ளது. இந்தியாவின் தெற்கு மூலையில் சர்வதேச கடல்வழிப்பாதை அருகே அமைந்து இருக்கிறது. தூத்துக்குடி கடலோர காவல்படையை சேர்ந்த கப்பல்கள் மன்னார் வளைகுடா பகுதியில் ரோந்து செய்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றன. தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றன.

    மேலும் தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு தனியாக விமான தளம் அமைக்கப்படுகிறது. இதற்காக தூத்துக்குடி விமான நிலையம் அருகே நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அந்த பணி முடிவடைந்ததும் ஓரிரு ஆண்டுகளில் விமான தளம் அமைக்கப்படும். இந்த விமான தளத்தில் இருந்து சில விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படும். இது கண்காணிப்பு பணி மட்டுமின்றி, மீனவர்களுக்கு உதவியாகவும் அமையும். அதே போன்று தூத்துக்குடி கடலோர காவல்படையுடன் அடுத்த ஆண்டு புதிதாக ஒரு ரோந்து கப்பல் சேர்க்கப்பட உள்ளது. 2020-ம் ஆண்டு மேலும் ஒரு ரோந்து கப்பல் தூத்துக்குடிக்கு வர உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    மீன்பிடிக்க சென்று நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 9 பேரை கடலோர காவல் படை விரைந்து சென்று மீட்டது. #TNFishermen #FishermenStranded #CoastGaurd
    சென்னை:

    தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர், விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது நடுக்கடலில் படகு பழுதடைந்தது. என்ஜின் அறையில் அதிக அளவு கடல் நீர் புகுந்ததால் மேற்கொண்டு படகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதுபற்றி கடலோர காவல் படைக்கு இன்று அவசர அழைப்பு வந்தது. இதையடுத்து கடலோர காவல் படை வீரர்கள் மீனவர்களை மீட்பதற்காக விரைந்தனர்.



    சென்னையில் இருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் தமிழக மீனவர்கள் தத்தளிப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற கடலோர காவல் படையினர் மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். #TNFishermen #FishermenStranded #CoastGaurd
    ×